அமெரிக்காவில் முஸ்லிம் பெயர் கொண்ட முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹசான் ஏடன்(52) அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்திலுள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா நகரில் 26 ஆண்டுகள் துணை போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த 2015- ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ளார்.
ஹசான் ஏடன் மார்ச் மாதம் 13-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் தனது பெயரின் காரணமாக சுமார் 90 நிமிடங்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஹசான் ஏடன் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்துக்கு கூறியதாவது:
மார்ச் மாதம் 13-ம் தேதி எனது அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு பாரீஸிலிருந்து விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன். சுங்கத்துறை அதிகாரிகள் எனது பாஸ்போர்ட்டை திரும்ப அளித்து, 'தாய் நாட்டுக்கு வரவேற்கிறோம்' என்று அனைவரையும் வரவேற்பது போல வரவேற்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் சுங்க அதிகாரிகள் என்னிடம் தனியாகவா வந்தீர்கள்? என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் நான் முன்னாள் போலீஸ் அதிகாரி என்று கூறினேன். அவர்கள் என்னை பொருட்படுத்தவில்லை, என்னை அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றார்கள்.
அதிகாரிகள் எனது போனை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. என்னை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதற்கான முழு காரணத்தையும் சுங்க அதிகாரிகள் என்னிடம் கூறவில்லை. தொடர்ந்து 42 வருடங்களாக அமெரிக்காவில் வாழும் இத்தாலியில் பிறந்த அமெரிக்க குடிமகன் நான்.
முன்னாள் போலீஸ் அதிகாரி என்று கூறியதற்கு அங்கிருந்த அதிகாரி ஒருவர், "உங்கள் பதவி ஒரு விஷயமல்ல" என்றார். மற்றொரு அதிகாரி "ஏடன் என்ற பெயர் காண்காணிப்புப் பட்டியலில் உள்ளது" என்றார் மேலும் என்னைப் பற்றி அதிகாரிகள் அளித்த செய்திகளை ஒரு நிறுவனம் குறுக்கு விசாரணை நடத்தியது என்று கூறினார்.
இதுகுறித்து அமெரிக்க சுங்க நிறுவனம் மற்றும் எல்லை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஏடன் குறித்து தனிப்பட்ட கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அமெரிக்கா வரும் அனைத்து பயணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்" என்றார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவியேற்றார். சில நாட்களிலேயே ஈரான், சிரியா, ஏமன், லிபியா, சோமாலியா, சூடான் ஆகிய 6 நாடுகளின் பயணிகள், அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அவர் உத்தரவிட்டார்.
Post a Comment