smile picker smile picker Author
Title: நடு இரவில் நடு காட்டில் பெற்றோல் தீர்ந்த நபருக்கு எப்படியோ வந்த மனித நேயம் (மனதை உருக்கும் சம்பவம்)
Author: smile picker
Rating 5 of 5 Des:
பதிவின் உரிமையாளர் : பூபதி முருகேஷ் சில மாதங்களுக்கு முன் ஒருநாள், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தேன். வழியில் பெட்...
பதிவின் உரிமையாளர் : பூபதி முருகேஷ்


சில மாதங்களுக்கு முன் ஒருநாள், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தேன். வழியில் பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றுவிட்டது. அது அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. அங்கிருந்து எந்த பக்கம் பெட்ரோல் பங்க் செல்ல வேண்டுமானாலும் 4 கிமீ வரும்.

இரவு 8 மணிக்கு மேல் மனிதர்களுக்கு பெர்சனல் டைம் என நினைப்பவன் நான். எனவே நண்பர்களை தொந்தரவு செய்யவும் மனதில்லை. பைக்கை சாய்த்து போட்டு ஓட்டியும் பெரிய பலனில்லை. விதியையும், பெட்ரோல் போடாமல் விட்ட மதியையும் நொந்தபடி உருட்ட துவங்கினேன்.

திடீரென இன்னொரு பைக்கில் இருவர் என் முன் வந்து நின்றனர். "என்ன சார் பெட்ரோல் இல்லையா?" என்றார் ஒருவர். "ஆமா சார்" என்றேன். அதை முழுதும் கூறி முடிக்கும் முன்னரே அவர் பைக் பெட்டியிலிருந்து சிறிய கேனில் பெட்ரோலை எடுத்து கொடுத்தார்.

எனக்கு ஏதோ கடவுள் வந்து தந்தது போன்ற உணர்வு. ஏனெனில் அந்த சாலையில் அந்த நேரத்தில் கையில் பெட்ரோலுடன் ஒரு பைக் வந்தது நான் என்றோ செய்த நல்வினைக்கான புண்ணியம் தான் என நினைத்தேன். தர்மம் தலைகாக்கும் என்பார்களே அப்படி.

பெட்ரோலை ஊற்றிவிட்டு "சார்.." என்று தயங்கியபடி ஒரு 100 ரூபாயை நீட்டி "இதை உங்கள் பெட்ரோலுக்கான காசா நினைக்காதீங்க, நீங்க எப்படியும் பெட்ரோல் போடுவிங்க அப்ப இதை பயன்படுத்திக்கோங்க" என்றேன்.

"இல்ல சார் பணமெல்லாம் வேணாம். நாங்க சிசிடிவி தொழில் பண்றோம், அடிக்கடி கஸ்டமர் இடங்களுக்கு செல்லும் போது இப்படி சூழ்நிலை வரும் அதான் பெட்ரோல் வாங்கி வச்சுருப்போம்" என்று மறுத்தார். எனக்கு அவர்களை அப்படியே அனுப்ப மனதில்லை.

"சரி உங்க தொலைபேசி எண் கொடுங்க. தொழிரீதியா உங்க உதவி தேவைப்பட்டா அழைக்கிறேன்" என்றேன். அவர் பெயர் ரசாக் என்றும் தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு என் நன்றியை சிரிப்பால் ஏற்றுக்கொண்டு சென்று விட்டார். (இன்னொருவர் பெயரை மறந்துவிட்டேன்)

வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்றிலிருந்து அவருக்கான நன்றியாக பெட்ரோல் போடும் போது ஒரு சிறிய பாட்டிலில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்வேன். அந்த பாட்டிலில் ஒரு ஸ்டிக்கரில் ரசாக் என்ற அவர் பெயரையும், அவர் தொலைபேசி எண்ணையும் எழுதியிருப்பேன்.

இதுவரை பெட்ரோல் இல்லாமல் ரோட்டில் உருட்டி சென்ற நான்கு பேருக்கு உதவியிருக்கிறேன். அவர்கள் பதிலுக்கு பணம் கொடுக்க வரும்போது பணம் வேணாம், என் நண்பர் சிசிடிவி கேமரா தொழிலில் உள்ளார். தேவைப்பட்டா அவரை அழையுங்கள் என்று ஸ்டிக்கரில் உள்ள எண்ணை கொடுப்பேன்..

யாருமே வேண்டுமென்றே பெட்ரோல் நிரப்பாமல் செல்வதில்லை. அவசரமான உலகத்தில் அவர்கள் பைக்கை உருட்டி செல்லும் நேரத்தில் நிறைய இழக்கலாம். அந்த பெட்ரோல் ஒரு 15ரூ தான் வரும். ஆனால் அந்த நேரத்தில் அது விலை மதிக்க முடியாதது. முடிந்தால் நீங்களும் செய்யுங்கள்.




அன்றைய இரவு எனக்கு இதை சொல்லி தந்தது. இருட்டில் அவர் முகம் கூட நினைவில் இல்லை. பெயர் மட்டும் தான் தெரியும் "ரசாக்". :-)

Advertisement

Post a Comment

 
Top