ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த யுகத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும், கடிதங்கள் வாயிலாக மட்டுமே 42 ஆண்டுகள் நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். அவர்கள், முதல்முறையாக ஏப்ரல் 11ல் நேரில் சந்தித்துக்கொண்டபோது வெளிபடுத்திக்கொண்ட அன்பின் தருணத்தை, ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.
நியூயார்க்கைச் சேர்ந்தவர், ஜார்ஜ் கோசன். இவருக்கும் சான் டியாகோவைச் சேர்ந்த லோரி கெர்ட்ஸ் என்ற பெண்ணுக்கும் பள்ளிப் பருவத்தில், கடிதம் வாயிலாக நட்பு மலர்ந்துள்ளது. வாழ்வில், ஒவ்வொரு தருணத்தையும் கடிதம்மூலமாகப் பகிர்ந்துகொள்வது இவர்களின் வழக்கம். லோரிக்கு 18 வயதில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு, குடும்பம், குழந்தைகள்,வேலை என பிஸியானபோதும், ஜார்ஜுக்கு கடிதம் அனுப்பத் தவறுவதில்லை லோரி. தற்போது அவருக்கு வயது, 54. தன் 18 வயது மகனுடன், ஜார்ஜை சந்திக்க நியூயார்க் வந்துள்ளார்.
ஜார்ஜின் தாய், 2006 -ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். தன் தாயின் இறுதிச் சடங்குக்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஜார்ஜ், தன் சோகத்தை அருகில் இருந்தவரிடம்கூட வெளிபடுத்தாமல், லோரிக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாராம்.
இத்தனை ஆண்டுகளாக, இவர்கள் இருவரும் ஏன் சந்திக்க முற்படவில்லை... என்ற கேள்வி அனைவருக்குமே தோன்றும். லோரியிடம் அவரின் குடும்பத்தினரே கேட்டுள்ளனர். ‘ஜார்ஜுக்கு ஒரு மூட நம்பிக்கை. நேரில் சந்தித்துப் பழகினால், நாங்கள் பிரிந்துவிடுவோம் என்ற பயம் அவருக்கு’, என்று பதில் அளித்துள்ளார் லோரி.
எழுத்துக்கள் வாயிலாக மட்டுமே நட்பைப் பரிமாறிக்கொண்டவர்கள், முதல்முறை நேரில் சந்தித்தபோது, கட்டித்தழுவி அழுதுள்ளனர். இந்த நிகழ்வை, அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது!
Post a Comment