சென்ற வாரமெல்லாம் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சி தொடர்பாகவும்,அதன் தலைவர் றவூப் ஹக்கீம் தொடர்பாகவும் மண்டியிட்ட செய்தியும் கிண்டிவிட்ட செய்தியும் பரவலாக செய்தித்தாள்களிலும், இணையத்தளங்களிலும் அடிபட்டது அதே போல் தற்பொழுது மீண்டும் முஸ்லிம் காங்ரஸ் தலைவர் தொடர்பாகவும் ராஜித சேனாரத்ன தொடர்பாகவும் இனவாத சாயம் பூசப்பட்டு ஒரு செய்தி பரவலாக அடிபடுகின்றது.
அண்மையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னால் அமைச்சர் ராஜித அவர்கள் கௌரவ முஸ்லிம் காங்ரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தனக்குப் பதவி கிடைக்கின்றது என்றால் தனது மதத்தினையும் மாற்றிக் கொள்வார் என ஒரு கருத்தை சொல்லியிருந்தார் இது உண்மையில் வன்மையாக கண்டிக்கத் தக்கதே இதற்காக ராஜித அவர்கள் கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அதே சமயம் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை சாட்டாக வைத்து தங்களது சொந்த அரசியல் இலாபங்களுக்காக ராஜிதவின் இக்கருத்துக்கு இனவாத சாயம் பூசி ராஜிதவை பொதுபலசேனாவின் ரேஞ்சிக்கு இனவாதியாக அடையாளப்படுத்துகிறார்கள் இதற்காக ராஜிதவிடம் முஸ்லிம் சமூகம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது முன்னால் ஆட்சியில் எந்நாளும் பொதுபலசேனாவின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் மௌனமாக இருந்த போதும் இந்த ராஜிதவும் எமக்காக குரல் கொடுத்தார், பொதுபலசேனாவுக்கு எதிராக வாதாடினார் என்பதை நாம் ஏன் மறந்து நன்றியற்றவராக இருக்கின்றோம்...??? பொதுபலசேனாவோடு அன்றும், என்றும் கீறியும் மாம்புமாக இருந்தவர்தான், இருப்பவர்தான் இந்த ராஜித சேனாரத்ன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது மாத்திரமல்ல கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் ராஜித சேனாரத்னவின் மகனான சத்துர அவர்கள் தனது பிரச்சாரங்களில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து பொதுலசேனாவுக்கு எதிராகவும், இனவாதத்திற்கு எதிராகவும் ஆக்ரோசமாக குரல் கொடுத்தார் என்பதையும் நாம் மறந்து விட்டோமே.
ராஜித சேனாரத்னவின் குறித்த கருத்துக்கு எமது கௌரவ முஸ்லிம் காங்ரஸ் தலைவர் அவர்கள் ஊடகவியலாளர்களிடத்தில் புன்னகையோடு ராஜிதவின் கருத்து கண்டிக்கத்தக்கது, அநாகரீகமானது என்று கூறினாரே தவிர ராஜித இனவாதி என்றோ, இனவாதக் கருத்தை எனக்கெதிராக கூறியிருக்கின்றார் என்றோ குறிப்பிடவில்லை ஆனால் இன்று முஸ்லிம் சமூகமும், ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் ராஜித வின் இக்கருத்துக்கு முற்று முழுதாக இனவாத நிறம் பூசி முஸ்லிம் சமூகத்துக்கும் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்குமிடையில் இனவாத தீயை கொழுத்தவே முனைகின்றார்கள். அறிக்கை விட எதுவுமில்லை என்ற போது ராஜிதவின் இக் கூற்றை கையில் எடுத்து அறிக்கை விடுவதை முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூகமும் கைவிட வேண்டும்.
அதே போன்று கௌரவ றவூப் ஹக்கீம் அவர்கள் பதவிவெறி பிடித்தவரோ, பணவெறி பிடித்தவரோ, பதவிக்காக மதத்தை மாற்றிக் கொள்ள முனைபவரோ அல்லது அற்ப உலக இன்பங்களுக்காக சோரம் போகக் கூடிய மதத்தில் இருப்பவரோ அல்ல என்பதை கௌர ராஜித அவர்கள் உணர்ந்து கொண்டு, கௌரவ றவூப் ஹக்கீமிடம் மன்னிப்புக் கேட்டு முஸ்லிம்கள் ராஜித சேனாரத்ன அவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகம் இன்று ராஜிதவை இனவாதியாகப் பார்ப்பதை பார்த்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதே இனி வேஸ்ட் என்ற மனநிலையில் ராஜித இருந்தால் இலங்கையில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சிங்கள அரசியல்வாதிகளில் ஒருவரை லிஸ்டில் இருந்து துாக்கி விட்ட பெருமை நம் முஸ்லிம் சமூகத்தையே சாரும்.
நான் கேட்கின்றேன் அமைச்சர் ராஜிதவுக்கும் அமைச்சர் ஹக்கீமுக்குமிடையிலான அரசியல் ரீதியான இக் கூற்றை இனவாதம் என்றால் நாளுக்கு நாள் ஊடக மாநாடுகளை நடாத்தி சிங்களவர்களையும், சிங்கள அரசியல்வாதிகளையும் காரசாரமாக விமர்சித்து, அநாகரீக, அசுத்த வார்த்தைகளையும் பிரயோகித்து ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிக்கைகள் விடுகின்றார்களே இவர்களை என்னவென்று சொல்வது...???
சத்தியமாக சொல்கின்றேன் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் எதிரிகளும், இனவாதிகளும் வேறு எங்கேயும் இல்லை நம் முஸ்லிம் சமூகத்தினிலே இருக்கின்றார்கள்.
Post a Comment