
பெற்றோர்களின் கரிசணைக்கு
அன்பார்ந்த எமது முஸ்லிம் சமூக பெற்றோர்களின் கவனத்துக்கு மிக முக்கியமான விடயங்கள் சிலவற்றை சமூக பொறுப்புடன் எத்திவைக்க வேண்டிய கட்டாயமான கடப்பாடு சமூகத்தில் ஒரு அங்கத்தவன் என்ற அடிப்படையில் எனக்கு உள்ளதாக நான் கருதி இந்த கட்டுரையினை ஆக்கியுள்ளேன்.
எமது முஸ்லிம் சமூகம் பல முக்கியமான விடயங்களில் மிக ஒழுக்கமான சமூகம் என்று பெயர் பெற்ற ஒன்று. எமது சமூக, இஸ்லாமிய மரபுகளின் வளர்ச்சியும் கலாச்சார கட்டுக்கோப்பும் பிற சமூகங்கள் எம்மை இன்னும் மரியாதையுடன் பார்ப்பதற்கு முக்கிய காரணியாகும். ஆனால் எமது சமூகத்தின் உள்ளே அரங்கேறுகின்ற பல உள் கூத்து கலாச்சார சீர் கேடுகளில் இருந்து எமது சிறார்களை, பெண்களை பாதுகாப்பது பெற்றோர்களினதும் பெரியவர்களினதும் தார்மீக கடமையாகும்.
சைத்தானானவன் எந்த வடிவத்திலும் வரலாம். இங்கு நான் அலசப்போகும் சைத்தான் மார்க்க உலமாவாக உலா வருவதுதான் மிக வருத்ததிற்குரிய அம்சமாகும்.
அண்மையில் எனக்கு ஒரு நண்பர் பல மின்னஞ்சல்களை தனக்கு ஒருவர் அனுப்புவதாக பகிர்ந்து கொண்டார். அதில் வந்த விடயங்களை பார்த்தபோது எமது சமூகம் ஒரு படு பாதாளத்தில் இருக்கின்ற அப்பாவி சமூகம் என்று கருதுகிறேன் .
இஸ்லாமிய அமைப்புக்கள் தெருக்குத்தெரு போட்டி போட்டுக்கொண்டு சன்மார்க்க பிரச்சாரம் பண்ணுகின்ற வேளை அதனுள் தொப்பியுடன் ஒளிந்துள்ள சில முல்லாக்கள் பண்ணியுள்ள காரியங்களை காணும் போது; எமது சமுதாயம் லூத் நபியின் சமூகம் போன்று அழிக்கப்பட்டாலும் நியாயமான ஒன்று என்பதை அந்த மின்னஞ்சல்களை வாசித்தது,
அதில் சிலர் கூறியுள்ள சாட்சிகளை அடிப்படையாக வைத்து என்னால் கூற முடியும். இவர்கள் மார்க்கத்தை நம்பி செல்லுகின்ற ஆண் மற்றும் பெண் பிள்ளைகளை சீரழிப்பது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றல்ல. எமது முஸ்லிம் பிரதேசங்களில் எது மலியாவிடினும் முஸ்லிம் மார்க்க அமைப்புகள் மலிந்து காணப்படுவது மறுக்க முடியாத உண்மையாகும். சமூகத்தை வழிப்படுத்த, இஸ்லாத்தை போதிக்க இஸ்லாமிய அமைப்புக்கள் தேவை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த மின்னஞ்சல்களை காணும் போது மிகவும் கண்ணும் கருத்துமாக எமது பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும் என்பது பெற்றோர் என்ற வகையில் நான் முழு சமூகத்துக்கும் கூறும் செய்தியாகும்.
அந்த மின்னஞ்சல்களை வாசித்து நான் விளங்கி கொண்ட விடயங்களின் சுருக்கத்தை இந்த கட்டுரையில் கூறுவது ஓரளவு விடயத்தின் பாரத்தை தெளிவாக்கும். ஒரு மார்க்க அமைப்பினை சேர்ந்த சில உலமாக்கள் தமது அமைப்பினை நம்பி வந்து மார்க்கம் கற்கும் ஆண் பிள்ளைகளை, பெண்களை நடித்து ஏமாற்றி பாலியல் ரீதியாக துவம்சம் பண்ணியுள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் வெளியில் வந்தால் எமது சமூகம் கூனிக்குறுக வேண்டிய நாள் மிக தொலைவில் இல்லை. இந்த விடயங்களை வாசித்த அடிப்படையில் பெற்றோர்களுக்கும் சமூகத்துக்கும் சில விழிப்புணர்வுகளை அளிக்க எனக்கு கட்டாய நிலை உருவாகி உள்ளது.
உங்கள் பிள்ளைகள் பால்ய வயதில் யாருடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதை மிகவும் விழிப்பாக இருங்கள். அவர்கள் எந்த பரிமாணத்திலும் வயதில் முதிர்ந்தவர்களுடன் பழக அனுமதிக்க வேண்டாம். இந்த எண்ணத்தில் உள்ள நபர்கள் பெற்றோர்களை நம்ப வைத்து ஏமாற்றவும் வாய்ப்புண்டு.
உங்கள் பகுதிகளில் உள்ள மார்க்கம் போதிக்கும் அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையை ஆராய்ந்து அதில் உங்கள் பிள்ளைகளை கற்பதற்கு அனுப்புவது மிகவும் நல்லது. வெளிப்படைத்தன்மை அற்ற அமைப்புக்கள்தான் இந்த வித செயல்களில் அதிகம் பெயர் போய் இருப்பது கடந்த கால வரலாறாகும். இரவில் மார்க்க பயிற்சி, இரண்டு மூன்று நாட்களுக்கு தலைமைத்துவ பயிற்சி போன்ற விடயங்களில் உங்கள் பிள்ளைகள் பங்குபற்ற அனுமதிக்காதிருப்பது இவ்வாறான சம்பவங்களின் அளவை குறைக்கும்.
சிறு வயதினரை குறிப்பாக பருவ வயதில் இருப்பவர்களை அமைப்பு ரீதியாக பெற்றோர்கள் மார்க்க கல்வி கற்க அனுப்புவது மிகவும் கவனமாக கையாளாப்பட வேண்டிய விடயமாகும். பிள்ளைகள் கெட்ட, நல்ல மனிதர்களை இனமறியும் பக்குவம் ஏற்பட்ட்ட பின்னர் மார்க்க அமைப்புகளில் ஈடுபட பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும். எப்போதும் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
இந்த கட்டுரையை எழுதியது முற்று முழுதாக சமூகத்தை அறிவூட்டுவதே ஆகும். என்னிடம் அந்த மின்னஞ்சல்கள் இருப்பினும் அதன் மூலம் எந்த இஸ்லாமிய அமைப்பு, மற்றும் ஈடுபட்ட நபர்களை வெளிப்படுத்தும் எண்ணம் என்னிடம் இல்லை. ஆனால் சமூகம் இவர்களை இனங்கண்டுகொள்ளுதல் மிக அவசியமாகும்.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment