குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கெட்ட செய்தியொன்று காத்திருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு புதிய பதவியொன்று வழங்கப்படுவது குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா என்பவர் போரின் போது போர்க் களத்தில் இருந்து நாட்டை பாதுகாத்த படைவீரராவார்.
அவரது உடலில் இருக்கும் காயத் தழும்புகள் இதற்கு சரியான உதாரணமாகும்.
காற்றுசீராக்கிகளைக் கொண்ட அறைகளில் சொகுசாக அமர்ந்து தொலைபேசி ஊடாக போர் செய்தவர்களும் இருந்தார்கள். தனியாக போரிட்டதாகக் கூறி சிலரைக் கொண்டு சரத் பொன்சேகா புத்தகம் எழுதிக்கொள்ளவுமில்லை.
இந்த இராணுவத் தளபதி ஜனாதிபதி தேர்தலில் 47 லட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்.
இதனால் நாடு பற்றியும் பாதுகாப்பு பற்றியும் விரிவான அறிவு அவருக்கு காணப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாதத்தினால் சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் ஒப்படைக்கப்படுவது பெரும்பான்மையான எமக்கு நல்ல செய்தியாகும்.
எனினும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குண்டர்கள் பாதாள உலகக்குழுக்களுக்கு அது கெட்ட செய்தியாகும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment