வெளிநாட்டு தொழிலாளர்களை படிப்படியாக குறைத்து தனது நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் சவூதி அரேபியா மெல்ல மெல்ல இறங்கி வருவது அனைவரும் அறிந்த விடயம்,
சில காலங்களுக்கு முன்பு ஆரம்பித்த சவூதி அரேபியாவின் இந்நடவடிக்கை மூலமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் நிறுவனங்களில் இருந்து ஆள் குறைப்பு செய்யப்பட்டு தமது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சவூதி அரேபியா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது, சவூதி அரேபிய தொழிலாளர் அமைச்சுக்கும் சவூதி அரேபிய பொது போக்குவரத்து துறைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு லட்சம் சவூதி அரேபியர்கள் சவூதி பொது போக்குவரத்து துறைக்குள் உள்வாங்கப்பட இருக்கிறார்கள்.
சவூதி அரேபிய பிரதி தொழில் அமைச்சர் அஹமத் பின் சாலாஹ் அல் ஹுமைதான் மற்றும் சவூதி பொது போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ருமைஹ் அல் ருமைஹ் ஆகியவர்களுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த செய்தியை சவூதி பிரஸ் ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு லட்சம் சவூதி அரேபியர்கள் பொது போக்குவரத்து துறைக்குள் உள்வாங்கப்பட இருக்கிறார்கள். சவூதி அரேபியாவின் தனியார் கார் நிறுவனங்களில் தற்பொழுது பத்தாயிரம் உடனடி வேலை வாய்ப்புகள் இருப்பதனால் முதற்கட்டமாக இந்த வெற்றிடங்கள் உள்நாட்டவர்களை கொண்டு நிரப்பப்படவிருக்கின்றன.
சவூதி போக்குவரத்து அமைச்சர் சுலைமான் அல் ஹம்தான்ப இது பற்றி கூறுகையில் சவூதி அரேபியாவின் அனைத்து போக்குவரத்து வாகனங்களும் உள்நாட்டவர்களை கொண்டே சேவையில் ஈடுபடுத்த தாம் தீர்மானித்துள்ளதாக கூறினார்.
தொழிலாளர் அமைச்சுக்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் இடையில் கைச்சத்தான இந்த உடன்படிக்கையை சவூதி அரேபியாவின் பல்வேறு முக்கிய நபர்கள் பாராட்டியும் தமது ஆனந்தத்தை வெளிப்படுத்தியுமுள்ளனர். பணியிலமர்த்தபடப்போகும் இரண்டு லட்சம் ஊழியர்களின் வழியாக பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வேலையிழக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான இந்நடவடிக்கை எதிர்காலத்தில் அந்த நாட்டின் அனைத்து துறைகளுக்குள்ளும் ஊடுருவும் சாத்தியம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.
-ரசானா மனாப் –
Post a Comment