முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தொகுதியில் அமைந்துள்ள பிரதேசசபை, நகரசபை ஆகிய இரண்டு சபைகளை கொண்ட பெரும் பிரதேசமான கிண்ணியாவின், நகரசபைக்குற்பட்ட மக்கள், கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் சுமார் 15 பேர்கள் வரை மரணித்ததனால் இந்நாட்டில் உள்ள அனைவரினதும் கவனம் கிண்ணியா பக்கம் திரும்பியது.
நாங்கள் சிரமதான பணிக்காக அங்கு சென்றதனால் நகர சபைக்குற்பட்ட பிரதேசத்தில் மட்டும் ஏன் இவ்வாறு டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்று ஆராய்ந்தபோது அதில் பல உண்மைகளை கண்டறியக் கூடியதாக இருந்தது.
அதாவது உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் கழிவுகளை பேணும் முறைமை எதுவும் அங்கு பேணப்படவில்லை. சுருக்கமாக கூறுவதென்றால் நகரசபையின் அதிகாரங்களும், சேவைகளும் சிறிதளவுகூட அங்குள்ள மக்களை சென்றடையவில்லை. அப்படியென்றால் இவ்வளவு காலமாக கிண்ணியா நகரசபை என்ன செய்து கொண்டிருந்தது?
கிண்ணியாவின் நகரசபைக்குட்பட்ட பைசல் நகர், இடிமண், புதியநகர் ஆகிய பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் இடிமண் ஆறு, மாஞ்சோலை ஆறு போன்றவற்றின் கரையோரங்கள் சுத்தம் செய்யப்படாமல் மிகவும் அசிங்கமாக சேரிப்புறங்கள் போன்று காணப்படுவதுடன் அநேகமான டெங்கு நோயை உண்டாக்கும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக காட்சி தருகின்றது.
குறித்த இப்பிரதேசத்தில் நீண்ட காலங்களாக காணப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை இயந்திரங்களின்றி மனிதர்களினால் அகற்றுவதென்பது இயலாத காரியமாகும். இதற்காக நகரசபையின் இயந்திர வளங்களே பயன்படுத்தப்படல் வேண்டும். ஆனால் அங்குள்ள மக்களோ இதில் அதிக அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இவ்வூர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை கொண்டதாகவே காணப்படுகின்றது. ஆனால் அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத முஸ்லிம் கிராமங்களுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தியில் முப்பது வருடங்கள் கிண்ணியா பிரதேசம் பின்னோக்கி காணப்படுகின்றது.
அத்துடன் மறைந்த ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களும், எம்.ஈ.எச். மஹ்ரூப் அவர்களும் நீண்ட காலங்களாக இப்பிரதேசத்தினை பிரதிநிதித்துவ படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆனால் குறிப்பிட்டு கூறுமளவுக்கு எந்தவொரு அபிவிருத்தி பணிகளோ அல்லது உட்கட்டமைப்பு வசதிகளோ இவர்களால் மேற்கொள்ளப்படவில்லை.
இவர்களது வாரிசுகளான நஜீப் ஏ மஜீத் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராகவும், கிழக்கு முதலமைச்சராகவும் பதவி வகித்தார். அதுபோல் ஊரோடு எந்தவித தொடர்புகளோ, அல்லது கிண்ணியாவின் வீதிகளையோ அறிந்திராது கொழும்பை வசிப்பிடமாக கொண்ட இம்ரான் மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் இந்த வாரிசுகளால் அங்குள்ள மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளைக்கூட ஏற்படுத்திக்கொடுக்க முடியவில்லை.
2௦௦1 ஆம் ஆண்டிலிருந்தே எம்.எஸ். தௌபீக் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். இவரது அரசியல் பிரவேசம் ஒரு விபத்து என்றே கூறவேண்டும். ஆனால் இவர் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் சுமார் 3௦ கிராமங்களுக்கும் தனது கடமையை செய்யவேண்டிய நிலையில் உள்ளார். இருந்தும் ஏராளமான அபிவிருத்திப் பணிகளை கிண்ணியாவில் செய்து கொண்டு வருகின்றார்.
ஆனாலும் தங்களுக்கு சிறந்த முறையில் வேலை செய்யக்கூடிய சாமான்ய மகனைவிட எந்தவொரு வேலை செய்யாவிட்டாலும் பருவாயில்லை. பெயருக்காவது பாராளுமன்ற உறுப்பினராக பதவியில் அமர்ந்துகொள்ளுங்கள் என்று மேட்டுக்குடி வர்க்கத்தினர்களுக்கு வாக்களிக்கின்ற நிலைமை அங்குள்ள சில பாமர மக்களிடம் காணப்படுகின்றது. எனவே கஷ்டங்கள் வருகின்றபோது தேர்தலில் வாக்களித்து பதவியில் அமர்த்துபவர்களை விட்டுவிட்டு ஏனையவர்களிடம் குறை பட்டுக்கொள்வது எந்தவகையில் நியாயமாகும்?
மேட்டுக்குடி வர்க்க அரசியல் இன்னமும் கிண்ணியாவிலிருந்து விடுபடவில்லை. இலங்கை முஸ்லிம்களிடம் காணப்பட்ட மேட்டுக்குடி அரசியலை தகர்த்தெறிந்து பாமரமகனும் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை பெருந்தலைவர் அஸ்ரப் உருவாக்கினார்.
ஆனால் மேட்டுக்குடி வர்க்க அரசியலுக்கு சமாதிகட்டும் பணியில் பெருந்தலைவர் அஸ்ரப்பினால் கிண்ணியாவில் வெற்றி பெற முடியவில்லை. அது இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
அங்குள்ள அப்பாவி மக்களில் சிலர் மஜீத், மஹ்ரூப் ஆகிய பெயர்களுக்காக இன்னமும் தங்களது பெறுமதியான வாக்குகளை வழங்குவதுடன், தேர்தல் காலங்களில் பிரதேச வாதங்களை உருவாக்குகின்ற இவ்வாறானவர்களை ஆதரிக்கின்ற நிலை காணப்படுகின்றது.
எனவே கொழும்பில் இருந்துகொண்டு தேர்தல் காலங்களில் மட்டும் ஊருக்கு வந்து தங்களது குடும்ப பெயர்களையும், பிரதேசவாதங்களையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களை நிராகரித்துவிட்டு, மக்களோடு மக்களாக களத்தில் நின்று மக்களுக்காக செயல்படுகின்றவர்களை தங்களது அரசியல் பிரதிநிதியாக தெரிவு செய்வதமூலம் மட்டுமே முப்பது வருடங்கள் பின்னோக்கி கிடக்கும் கிண்ணியாவை அபிவிருத்தியடய செய்ய முடியும்.
Post a Comment