Unknown Unknown Author
Title: தண்டம் விதித்த பொலிஸாருக்கு எதிராக வீதி மறிப்பு போராட்டம்! அடிபணிந்த பொலிஸார்
Author: Unknown
Rating 5 of 5 Des:
புத்தளம் - கொழும்பு வீதியின் தூரப் பயணச் சேவை பஸ்களின் பயணிகளும், பஸ் சாரதிகளும் புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக...
புத்தளம் - கொழும்பு வீதியின் தூரப் பயணச் சேவை பஸ்களின் பயணிகளும், பஸ் சாரதிகளும் புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக வீதியை மூடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (21) இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அவ்வீதியின் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
புத்தளம் அநுராதபுரம் வீதியில் பயணிக்கும் யாழ்ப்பாணம் கொழும்பு, மன்னார் கொழும்பு, அநுராதபுரம் கொழும்பு போன்ற தூரப் பயண பஸ்களில் அதிகளவு பயணிகள் ஏற்றப்பட்டதற்காக தண்டப் பண பத்திரம் வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியது.
இன்று (21) காலை 8.30 மணியளவில் ஆரம்பித்த இந்த எதிர்ப்பு நடவடிக்கை காலை 10.30 மணி வரையில் இடம்பெற்றது.
இது குறித்து பஸ்களின் சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறு அதிக பயணிகள் பஸ்களில் ஏறுவது கலா ஓயாவிலிருந்து புத்தளம் வரையில் மாத்திரமே என்றும், அவ்வழியில் வேறு போக்குவரத்துச் சேவைகள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு இப்பயணிகளை ஏற்றுவதாக தெரிவித்தனர்.
அதேபோன்று அவ்வாறு பயணிகளை ஏற்றாது வந்தால் தம்மால் அவ்வழியால் பயணிக்கும் போது பல்வேறு பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடுவதால் மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த பயணிகளை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் போக்குவரத்துப் பொலிஸார் இவ்வாறு அதிகளவில் தண்ட பணம் விதிப்பதால் தம்மால் தமது தொழிலைச் செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளதாகவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இன்று காலை முதல் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட நேர்ந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது குறித்து பயணிகள் கருத்து தெரிவிக்கையில்,
தமக்கு இவ்வழியில் பயணிப்பதற்கு வேறு பொது போக்குவரத்து முறைகள் இல்லாத காரணத்தினால் இந்த பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளதால் இவற்றைப் பற்றி சிந்திக்காமல் பொலிஸார் தண்டம் செலுத்துவதற்கான பத்திரங்களை வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் அவ்விடத்திற்கு சென்ற புத்தளம் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன உள்ளிட்ட சுமார் 30 பேரளவிலான பொலிஸார் நிலைமையினைக் கட்டுப்படுத்த பாரிய முயற்சிகளை மேற்கொண்டதைக் காண முடிந்தது.
இன்றைய தினம் பொலிஸாரால் வழங்கப்பட்ட தண்டம் செலுத்துவதற்கான பத்திரத்தை ரத்துச் செய்து தமது சாரதி அனுமதிப் பத்திரங்களை மீள ஒப்படைத்தால் மாத்திரமே இந்த எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து விலகிச் செல்வதாக பஸ் சாரதிகளும், பயணிகளும் தெரிவித்தனர்.
இதனையடுத்து அனைத்து சாரதிகளையும் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருமாறும் அங்கு வைத்து இது தொடர்பில் சுமுகமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளலாம் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்ததையடுத்து சாரதிகளும் பயணிகளும் எதிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டு விட்டு அங்கிருந்து விலகிச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.




Advertisement

Post a Comment

 
Top