6.2 மில்லியன் மக்களின் வாக்குகளால் மைத்ரிபால தெரிவானது அவருக்கிருந்த தனிப்பட்ட மரியாதைக்காக அன்றி, மஹிந்த ராஜபக்சவின் மீது இருந்த மக்களின் வெறுப்பினால் என்று அண்மையில் ஊவா முதலமைச்சர் ஹரின் பெர்னான்டோ சுட்டிக்காட்டியிருந்தார்.
மஹிந்த ராஜபக்சவின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த மக்களின் உள்ளக் குமுறலாகவே ஜனாதிபதித் தேர்தல் முடிவு காணப்பட்டது. இருப்பினும் ஜனாதிபதி பதவிக்கு அதிகபட்சமாக சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்ற நபர் எனும் அடிப்படையில் மைத்ரியின் பொறுப்பு அதற்கப்பால் விரிவடைந்த விடயம். மக்கள் நம்பிக்கையை வென்ற தலைவன் என்ற வகையில் நேற்றிரவு வரை தன்னை நம்பி வாக்களித்தவர்கள், தேர்தலின் பின் தன் ஆதரவாளர்களாக மாறியவர்கள், தேர்தலின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையெனவே பின் நம்பியவர்கள் என பல தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில் செயற்பட்டு வந்த மைத்ரிபால சிறிசேன மீண்டும் மஹிந்த ராஜபக்சவுக்கு குறைந்த அல்லது கூடிய பட்ச சலுகையாக அவர் தலைவராக இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் பங்கேற்க அனுமதித்திருப்பது நம்பிக்கை வைத்தவர்களுக்கு விழுந்திருக்கும் பேரிடியாகும்.
வேட்பாளர் மாத்திரமே
மஹிந்த ராஜபக்ச தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் வாக்கு வங்கியின் ஓட்டையை நிரப்ப அவரைக் கூட வைத்துக்கொள்ள முடிவெடுத்திருக்கும் மைத்ரி, சம்பிரதாயத்துக்காகவெனினும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க மாட்டாரா எனும் கேள்விக்கும் விடையிருக்கிறது. விடயம் கேள்விப்பட்ட உணர்வில் நம் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரிடம் கேட்ட போது ஒப்பந்தக் கடிதத்தின் அடிப்படையில் அதாவது அவர் பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரமே வர முடியும் எனும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கடிதம் பெறப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறினார்.
அட, அதுவும் அப்படியானால் பாராளுமன்றிற்குள் வந்த பின் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற மஹிந்தவைப் பிரதமராக்கும் கோரிக்கை வலுப்பெற்றால், போராட்டங்கள் வெடித்தால், பாராளுமன்றில் படுத்துறங்க அவர் ஆதரவாளர்கள் முடிவெடுத்தால்…? என்று கேட்டால்… ம்… என்பதைத் தவிர பதில் இல்லை. ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சி வென்று விடும் வாய்ப்பிருக்கிறது என்றும் பதில் வருகிறது. ஓ! ஐக்கிய தேசியக் கட்சி வென்றாலும் ஒரு ஆபத்திருக்கிறதே, அதாவது இரண்டாவது பெரும்பான்மையைப் பெரும் கட்சிக்கு உதவிப் பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமே என்ற போது… ம்… நீண்ட சிக்கல்! என்று பதில்.
இந்த ஆபத்தான விளையாட்டைக் கையாளும் திறன் 50 வருட அனுபவம் வாய்ந்த அரசியல் வாதியான மைத்ரிபால சிறிசேனவுக்கு இருக்கிறதா? என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ள விடயம். அப்படியானால் சிறுபான்மை மக்களின் நிலையும், தெரிவும் எப்படியிருக்க வேண்டும் எனும் அவசரக் கேள்வி அனைவர் மனதிலும் ஓட ஆரம்பித்து விட்டது. பதில்.. ஓரிரு நாட்கள் பொறுமையாக இருப்பது நல்லது என்பதாக இருப்பினும், துரோகம் அல்லது ஏமாற்றம் உணரப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இது சற்று கனதியான தீர்வாகப் பார்க்கப்படலாம். (ஏற்கனவே உயர்ந்தெழுந்துள்ள ஐ.தே.க உணர்வலை இந்நிகழ்வால் எத்தனை தூரம் பாதிக்கப்படும் எனும் சந்தேகமிருந்தால் தவிர..)
ஆனால், நாளையே மைத்ரி அந்தக் கட்சித் தலைமையிலிருந்து விலகி விடுகிறேன் என அறிவித்தாலோ, சந்திரிக்கா மீண்டும் அந்த மார்கழிப் போராட்டத்தை முன்னெடுக்கத் தலையெடுத்தாலோ களம் சமநிலை காணலாம், மீண்டும் சிறுபான்மை மக்களின் கடின உழைப்பும் பங்களிப்பும் அவசியப்படும் எனவே தயார் நிலை அவசியம். ஆனாலும், திருட்டுப் பட்டம் சூட்டப்பட்ட யாரும் திருடர்களில்லையென்று பட்டம் சூட்டியவர்கள் ஒன்றிணைந்து களத்தில் நிற்பது பெரும்பான்மை வாக்கு வங்கியை திருப்திப்படுத்தும் என்பதும் மறுப்பதற்கில்லை.
சற்றே பொறுக்கச் சொல்கிறது அரசியல்!
Post a Comment