நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக செயற்படுமாயின் இன்று பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருந் திருப்பர் எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,
மக்களால் தோற் கடிக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்ந்தும் தமது குற்றங்களை மறைப்பதற்காக தொங்கிக்கொண்டு அரசியல் செய்ய இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு நகர சபையில் நேற்று நடைபெற்ற பார்வையற்றவர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே சந்திரிகா இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனவரி 8-ம் திகதிக்கு பின் மக்கள் அமைதியாக வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றி புது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். ஆனால் முடிந்து போன சந்தர்ப்பத்தை மீண்டும் அழைத்து அழிவுக்குச் செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். நாம் சரியாக செயற்பட்டிருந்தால் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும்.
சட்டம், நீதிமன்றம் சரியாக செயற்பட்டால், குற்றம் செய்தவர்கள் இன்று பிரதமர் பதவி கேட்பவர்கள் என பலர் சிறையில் இருப்பர். அப்படி செய்யாதது ஐயோ பாவம் என்று அவர்களுக்கு அமைதியாக இருக்க இடமளித்துள்ளோம். அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை.
அப்படியானவர்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுக்க நினைப்பது மக்களின் எதிர்பார்ப்புக்களை தூக்கி நிலத்தில் அடிப்பதற்கு ஒப்பாகும்.எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தவறு செய்தால் சிறை செல்ல வேண்டும். வீடு சென்று வாயை மூடிக் கொண்டு இருக்கவும் வேண்டும்.
அரசியல் தலைவர் ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பு அது. அதைவிடுத்து தினமும் இதில் தொங்கிக் கொண்டு அட்டை போல இரத்தம் குடிப்பதற்கு இடமளிக்கமுடியாது.
மக்களின் வாக்கினால் தேர்தலில் தோற்றால் வீட்டில் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகப் பண்பு. மக்கள் அரசியல் என்பது அதுதான். இலங்கை ஹிட்லர் தேசம் அல்ல. கொலை செய்து கொண்டு, ஊழல் செய்து கொண்டு இருக்க முடியாது. அதனால்தான் 9 வருட குறுகிய காலத்தில் மக்கள் அணிதிரண்டு வீட்டுக்கு விரட்டி அடித்தனர்.
பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு. அதற்கென மக்களுடன் சேர்ந்து எந்தவொரு போராட்டத்திற்கும் நாம் தயார். நாம் போராட்டத்தில் இறங்குவது பயம் என்ற ஒன்றை அருகில் வைத்துக் கொண்டு அல்ல.
ஆனால் எம்மால் இதனை தனியாக செய்ய முடியாது. இலங்கையை பெறுமதியான மக்கள் வாழும் நாடாக மாற்றி அமைக்க வேண்டும்.
எமது உயிர்களிற்கு ஆபத்துள்ள போதிலும்,நாட்டிற்காக நாங்கள் எந்த மோதலிலும் ஈடுபடுவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment