https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: அளுத்கம கொலைக்களமாகி ஒரு வருடமாச்சு…. (ஒரு சிறப்பு பார்வை)
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறைபடிந்த,கறுப்புவருடமொன்று இருக்குமென்றால், அது கசப்பான துன்பவியல் சம்பவங்கள் நிகழ்ந்தேறிய 1915தான்...



இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறைபடிந்த,கறுப்புவருடமொன்று இருக்குமென்றால், அது கசப்பான துன்பவியல் சம்பவங்கள் நிகழ்ந்தேறிய 1915தான் என்பதை எவராலும் என்றுமே மறுக்கமுடியாது

இலங்கையில் இந்த 1915 மேமாதம் 28 ல்தான் மிலேச்சத்தனமான, முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இனக்கலவரம் வெடித்திருந்தது.

1883 மார்ச் 25ல் பெளத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் ஓர் இனக்கலவரம் உசுப்பேற்றப்பட்டு, அதில் இருவர் படுகொலைசெய்யப்பட்டிருந்தும் அக்கலவரம் குறிப்பிட்ட கொழும்பு- கொட்டாஞ்சேனை எல்லையைவிட்டு வெளிப்பரவாதநிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான 1915 கலவரத்தையே இலங்கையின் பாரிய முதல் இனக்கலவரமென ஆய்வாளர்கள் வர்ணிக்கிறார்கள்.


பத்து தசாப்தகாலமாகியும் இன்னமும், தொண்டைக்குழியில் சிக்கிய மீன் முள்ளாய் உறுத்தத்தான் செய்கிறது முஸ்லிம்கள் கொலைக்களம்கண்ட 1915.

வரலாற்றைப் படிக்கும்போதே நெஞ்சைஅடைக்கிறது.
இத்தனை பாரதூரமான, ஈவிரக்கமற்றதோர் இனக்கலவரத்தை இதுவரைக்கும் இலங்கை கண்டிருக்கவில்லை. 1983 கறுப்பு ஜூலையைவிடவும் இது பயங்கரமாக இருந்ததென்பது பலர் அறியாததொன்று.

கம்பளை பள்ளிவாசலில் துவங்கிய மேற்படி 1915 இனக்கலவரம் கண்டி, கம்பளை, புத்தளம் போன்ற பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவியது. கண்டிகாசல் ஹில் பள்ளிவாசலிலும் அது உக்கிரம் கொண்டமர்ந்தது.
இன்றைய இலங்கையைப்போல அப்போது இலங்கையின் பலபிரதேசங்களிலும் பெருத்த பெளத்த விகாரைகள் காணப்படவில்லை. ஆனால், பலபிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாயல்கள் அமைந்திருந்தன.


இறைச்சிக்கடைகள், தையல்கடைகள், தேநீர்க்கடைகள் என்று அன்றைய இலங்கையின் நகர்ப் பிரதேச வர்த்தகத்துறையில் அதிகமதிகம் முஸ்லிம்களே கோலோச்சிக் கொண்டிருந்தனர்.

முக்கியமான ஆய்வாளர்களின் கருத்துப்படி (இதில்பிரதானமானவர் குமாரி ஜெயவர்தன. 1931ல் பிறந்த இவர் 1955ல் அரசியல்துறையில் லண்டனில் முதுமானிப் பட்டம் பெற்ற கையோடு,1958ல் பரிஸ்டர் பட்டமும்,1964ல் இலங்கை தொழிலாளர் அமைப்பு தொடர்பில் கலாநிதிப் பட்டமும் பெற்றவர். பல புத்தகங்களை எழுதிய சிறந்த ஆய்வாளர்.);


1880 காலப்பகுதியில் கொழும்பு, புறக்கோட்டைவர்த்தகம் 64 முஸ்லிம் வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலும், 86 செட்டியார்களின் கரங்களிலும் இருந்தததாகத் தெரியவருகிறது.

அப்போதைய முழு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரமும் ஏழு போரா முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, அவர்கள் சொந்தமாக கப்பல்களையும் வைத்திருந்ததாகக் குறிப்பிடும் குமாரி ஜெயவர்தன, கொழும்பில் மட்டுமன்றி அப்போதைய இலங்கையின்  பல பிரதேசங்களிலும் வர்த்தகத்துறையில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.


அப்போதைய பெளத்தர்களை விடவும் முஸ்லிம்கள் வசதிமிக்கவர்களாக இருந்தார்கள் என்பதும், சிங்களவர்கள் மிக வறுமைப்பட்டவர்களாகவும், பாதையோரங்களில் வெற்றிலை வியாபாரம் செய்பவர்களாகவும் இருந்து வந்தார்கள் என்றும்ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், இன்றைய முஸ்லிம்களின் பல்துறை வளர்ச்சி வேகத்தைக் கட்டுபடுத்த அல்லது மழுங்கடிக்க இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் அடாவடித்த்னங்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் ஏற்பவே அன்றைய அப்பாவி  சிங்கள சமூகம்உசுப்பேற்றப்பட்டதில்தான் 1915 இனக்கலவரம் வெடித்தது.

இந்தக் கலவரத்தில் 4075 வீடுகளும், வர்த்தக நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்ட கடைகள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன.
பதினேழு பள்ளிவாயல்கள் தீக்கிரையாக்கப்பட்டு மேலும் 86 பள்ளிவாயல்கள் மீது கடுமையான தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. நான்கு பெண்கள் கற்பழிக்கப்பட்ட கொடூரத்தோடு, இக்கலவரத்தில் 25 பேர் கொல்லப்பட்டு, மேலும் 189 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் தெரியவருகிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான இன்றைய பேரினவாதிகளைப்போலஅன்றைய அநகாரி கதர்மபால (1864 – 1933) போட்ட தூபம்தான் மேற்படி கலவரம் கொளுந்து விட்டெரிந்ததற்குக் காரணம் என்பது எவராலும் மறுதலிக்க முடியாதது.

முஸ்லிம்களை யூத அடிவருடிகள் என்றும், இந்தியாவில் இருந்து வந்த இந்த முஸ்லிம்கள் அப்பாவி சிங்களவர்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து வசதியான ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் மேற்படி 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய பெளத்த அடிப்படைவாதி பிரசாரம் செய்ததிலேயே அப்போதைய சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.


தற்போதைய ரோயல் கல்லூரியான அப்போதைய கொழும்பு அகடமியில் கல்விகற்ற இந்த ஹேவாவித்தாரன பிறகொரு சந்தர்ப்பத்திலேயே தனது பெயரை அநகாரிக தர்மபால என்று மாற்றிக்கொண்டார். தர்மபால என்றால் ‘தர்மதேசத்தின் காவலர்’ என்றும், அநகாரிக என்றால் ;இருப்பிடம் துறந்தவர்’ என்றும் அர்த்தம்.


பெளத்த மத எழுச்சியை உயிர் மூச்சாகக்  கொண்டிருந்தஇவரது மனோபாவமே மேற்படி 1915 கலவரத்திற்கு வித்திட்டதெனலாம்..
இதே மனோபாவத்திற்கு உட்பட்ட அமைப்புகளாகத்தான் இன்றைய பொதுபலசேனாவும், சிங்களராவயவும் அரிதாரம் பூசிக்கொண்டுள்ளன.
இந்த அமைப்பு சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் அங்கீகாரமும், வசதிகளும் முஸ்லிம்களின் நிகழ்கால நியாயபூர்வ அச்சத்தை மேலும் ஒருபடி அதிகரிக்கச்  செய்திருக்கின்றன. செய்திருந்தன.


ஹலால் விவகாரம் தொட்டு இன்று இவர்கள் முஸ்லிம்களை அடி வேரறுக்கப் பகிரங்கமாகப் புறப்பட்டிருப்பதிலும் சரி, நிஜயுத்தத்தைவிடக் கொடூரமான மவுன யுத்தத்தின் ரகசியத் திட்டமிடுதல்களிலும் சரி…. சகலமும் அறிந்த முன்னாள் மஹிந்த அரசு மவுனமாகவும், பொறுப்புக் கூறாமலும் இருந்ததில் இந்த ஐயப்பாடு பன்மடங்குகளாகவே அதிகரித்திருந்தன.


முதலாம் உலகப் போர்ச் சூழ்நிலை காரணமாக, குறித்த 1915 கலவரம் பெரும் அழிவுகளைக் கொண்டு வருவதற்குள் அப்போதைய அதிகாரத்தில் இருந்த பிரித்தானியா அதை அடக்கியது.
ஆனால், மஹிந்த ஆட்சிக்காலத்தில் அடக்கவேண்டிய அதிகாரம் படைத்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையே தொடர்ந்ததில், முஸ்லிம்களின் இருப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகவே இருந்தது எனலாம்.


மாவனல்லை, பதுளை, ஹொரதொடுவ, தர்காநகர், அளுத்கம, கன்னத்தோட்டை, பேருவளை, தெஹிவளை, மொரட்டுவ, நாரம்மல, தம்புள்ளை என நாளுக்கு நாள் பேரினவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளான முஸ்லிம் பிரதேசங்களின் பட்டியல் நீண்டு கொண்டேசென்றது.


முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது…. .பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன…..அருவெறுப்பான வார்த்தைகளால் இஸ்லாமிய மார்க்கம் நிந்திக்கப்பட்டது……குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து லாவகமாக என்றில்லாமல் மிக இயல்பாகத் தப்பித்துக்கொண்டிருந்தார்கள்..….(புதிய அரசிலும் அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பது வேறு விடயம்)

‘ இனிவரும் காலம் பயங்கரமாக இருக்கும் ‘ என ஒருபோது விமல்வீரவன்ச தெரிவித்ததிலும்சரி… ‘ இது முற்றுப்புள்ளியல்ல….இதுதான் துவக்கம்…’ என அளுத்கம தாக்குதலுக்குப் பிறகு ஞானசாரர் வீறாய்ப்பாகப் பேசியதிலும் சரி…


முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள் மிக லாவன்யமான முறையில் ஏலவே திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.
எப்படியோ,முஸ்லிம்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஆரோக்கியமான சூழலை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பது மட்டும் புரிந்தது.புரிகிறது.

இந்நிலைமை தொடர்ந்து, மீளவும் இலங்கை வாழ் முஸ்லிம்களை ‘ யூத அடிவருடிகளாக’க் காட்டும் முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இப்படி….பேரினவாதிகள் பெரும்பான்மைச் சமூகத்தை மூளைச் சலவை செய்து தம்பக்கம் ஒரு தொகையினரை இழுத்துக் கொள்ள நேரிடும் பட்சத்தில், கொடிய 1915 கலவரத்தின் நூற்றாண்டு விழாவை 2015ல் அவர்கள் நமது முஸ்லிம்களின் உயிர்கள் மீதும் உடைமைகள் மீதும்தான் கொண்டாட எத்தனிப்பார்கள்  என்றே அச்சம்தோன்றியிருந்த நிலையில்.சற்று ஆறுதலாக மஹிந்த ஆட்சி மாறியிருக்கிறது.


இதற்கான பயிற்சிக் களமாகத்தான் அவர்கள் அளுத்கமவைப் பாவித்து….அதில் வென்றும் காட்டியிருந்தார்கள்.

அளுத்கமவிலிருந்து தெஹிவளை வரை….
ஓரிரவுக்குள் உக்கிரம் பெற்ற இன வன்முறை.
அளுத்கம, தர்காநகர் பிரதேசங்களில் பொதுபலசேனா, சிங்களராவய இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து இற்றைக்கு (ஜூன் 15) சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகிறது.


மேற்படி பிரதேசத்தில் 2014 ஜூன் 13ஆம் திகதி முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கும், பெளத்த மதகுரு ஒருவரின் சாரதிக்குமிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட விவகாரம் வலுப்பெற்றிருந்ததில், குறித்த சாரதி தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதோடு, அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞர் கைதும் செய்யப்பட்டிருந்தார்.


எனினும் அன்றையதினம் இரவு மேற்படி பிரதேசங்களில் காடையர்கள் சிலரால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பலவும் தாக்கப்பட்டிருந்தன. மறுநாள் இப்பிரதேசங்களில் கடையடைப்பும் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் முஸ்லிம் கவன்சில் உட்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் பலர்  பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவோடு களுத்துறை பொலிஸ் காரியாலயத்தில் சுமுக பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டனர்.


பிரதி பொலிஸ்மா அதிபர் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்த்தார், ஆனாலும் குறித்த முஸ்லிம் இளைஞருக்குப் புறம்பாக எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.


இதேநேரம், சம்பவத்துடன் தொடர்புபட்ட பெளத்த மதகுருவை , முன்னைய தினம் ஊர்வலமாக அழைத்துச் செல்லவே பொதுபலசேனா திட்டமிட்டிருந்தது. அதன்படியே சக அமைப்புகளோடு மேற்படி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடும் செய்திருந்தது.
இவ்வார்ப்பட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு பல தரப்பினரும் பாதுகாப்பு வட்டாரங்களை கோரியிருந்த போதும் அது பலனளிக்கவில்லை.


மாறாக,விசேட அதிரடிப் படையினரும் அங்கு கொண்டு போய்க் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முதல்நாள் மதியம் ஆரம்பமான இந்த இனவாத ஆர்ப்பாட்டம் மாலையில் நிறைவெய்தி சகலரும் கலைந்துபோகும் நேரத்திலேயே குண்டர்கள் கல்வீசி கலகத்தை ஆரம்பித்துள்ளார்கள்.(முதல் கல் முஸ்லிம் பிரதேசவாசிகளிடமிருந்து எறியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.)


பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகித்து, ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்ட பிறகுதான் மேற்படி குண்டர்களின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ளது.
இரவு தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மேற்படி முஸ்லிம் பிரதேசங்களில் அவர்களது சொத்துக்களையும், உடைமைகளையும் துவம்சம் செய்த இவர்கள், முஸ்லிம்களை மூர்க்கமாக தாக்கவும் ஆரம்பித்தனர்.


அதுவரை அங்கே நிலை கொண்டிருந்த பொலிஸார், அந்த ஊரடங்குச்  சட்ட நேரத்தில் – குண்டர்கள் பலமான தாக்குதல்களை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில் அவ்விடங்களை விட்டு மாயமாய் மறைந்திருந்தத போக்கையும் அவதானிக்க முடிந்திருந்தது.


அளுத்தகம, தர்காநகர், பேருவளை, வேல்பிடிய, துந்துவ, தெஹிவளை என இக்கலகம் ஓரிரவுக்குள் பல பிரதேசங்களுக்கும் பரவியது.
இதேவேளை, கண்னத்தோட்டையிலும் முஸ்லிம் பாடசாலை நிர்மாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பெளத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அசம்பாவங்கள் நிகழ்ந்த மேற்படி பிரதேசங்களில் 500 இற்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஊரடங்குச் சட்ட நேரத்தில் அவர்கள் சட்டத்தை தம் கைகளில் எடுத்திருந்ததை அவதானிக்கும்போது அது அதிகாரத் தரப்பினரின் மறைமுக அங்கீகாரமாக இருந்தததாகவும் பலர் தெரிவித்தனர்.



வெறித்தனமான இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டும், எழுவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், சுமார் 80 பேர் வெட்டுண்டு காயப்பட்டும், 40 இற்கும் மேற்பட்டவர்கள் இரத்தம் தோய்ந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும்பட்டனர். 


100 இற்கும் மேற்பட்ட கடைகளும் வீடுகளும் தீ வைத்து எரிக்கவும் சேதத்துக்குள்ளாக்கவும் பட்டன. 02  பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டதோடு பெட்ரோல் குண்டுகளும் எறியப்பட்டன.
1500 இற்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் அனாதரவாக பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடம், மற்றும் பள்ளிவாசால்களில் தஞ்சம் புகுந்தனர். 


அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு, குறித்த கலகப் பிரதேசங்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் இருவரும் நாட்டில் இல்லாத நேரம் பார்த்தே இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதில், இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கலாம் என பலரும் சந்தேகம் தெரிவித்தனர்.


ஆயினும், இந்த நியாய அநியாயங்களின் தீவிரத்தையோ… சிறுபான்மையை இலக்குவைத்து அடிக்கடி மாற்றங்களுக்குள்ளான அப்போதைய அரசாங்கத்தின் தந்திரோபாயங்களையோ உணறும் மனோநிலையில் நம்மில் பலபேர் இருக்கவில்லையென்பதுதான் துர்பாக்கியம்
எப்படியோ, முஸ்லிம் தலைமைகள் அபோதைய அரசின் பாதுகாவலர்களாகத்தான் தம்மைக் காட்டிக் கொள்ள முயன்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.


“முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகள் தொடர்பில் விளக்குவதற்கு எவருமே முன்வரவில்லை” என்று முன்னாள் ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையே கோடிட்டுக் காட்டும் அளவில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அப்போது மவுனமாகத்தான் இருந்திருக்கின்றன.

தீக்குச்சி தீண்டாமல்…உரசாமல் தீப்பொறி பறப்பதில்லை.
நமக்கான தீக்குச்சிகளோ அச்சத்தில் நனைந்து, உறைந்து கிடந்தன என்பதுதான் உண்மை.(நிறைவு)


Advertisement

Post a Comment

 
Top