
அப்துல் சத்தாரின் சில்லறை அரசியல்!
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அந்த வகையில் யார் எந்த அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதை இன்னொருவர் தீர்மானிக்கவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ முடியாது. அதே போன்று யார் யாரை அரசியல் ரீதியாக ஆதரிக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதும், இன்னொருவருடைய அபிப்பிராயத்தை மற்றவர் மீது திணிப்பதும் ஜனநாயக விரோத செயலாகும். அதனடிப்படையில் அப்துல் சத்தார் என்ற தனி மனிதனுக்கு மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் சகல உரிமைகளும் மில்பர் கபூர், அலவி மௌலானா, அஸ்வர் உட்பட யாருக்கு வேண்டுமானாலும் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் உரிமையும் உண்டு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனாலும், தமது அபிப்பிராய பேதங்களை ஒரு சமூகத்தை வைத்து வியாபாரம் செய்ய முனைவது சில்லறைத்தனமானதும் சமூக விரோதமானதுமான செயற்பாடாகும்.
மஹிந்த ராஜபக்சவை தேர்தலின் போதும், தேர்தல் முடிந்த பின்னும் ஆதரிக்கும் அரசியல் வாதிகளும் முஸ்லிம் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். 2010 தேர்தல் வெற்றி முஸ்லிம்களின் பங்களிப்பில்லாமல் மஹிந்தவுக்குக் கிடைக்கவில்லை. அதே போன்று அரசியல் ரீதியாக கடந்த டிசம்பர் வரை ரவுப் ஹகீமோ, ரிசாத் பதியுதீனோ, பைசர் முஸ்தபாவோ, பௌசியோ யாருமே மஹிந்தவை எதிர்த்தியங்கவில்லை. பின்னரான கால கட்டத்தில் கூட தாம் அரசை விட்டு வெளியேறிய போதும் இதுவரை மஹிந்தவைச் சாடி நேரடி எதிர்ப்பில் விலகி வந்தவர்கள் கூட ஈடுபடவில்லை. காரணம், முஸ்லிம் சமூகத்தின் மஹிந்த அரசு மீதான கோபம் என்பது அவ்வரசு பொது பல சேனா எனும் கடும்போக்குவாத அமைப்பை தமது அரசியல் இலாபத்திற்காக வளர்த்தெடுத்ததும், முஸ்லிம் சமூகத்தைப் பிரதானமாகக் குறிவைத்து எமது இருப்பையும் கேள்விக்குறியாக்கியதுமாகும
அதன் உச்ச கட்டத்தை கடந்த ஜுன் மாதம் 15ம் திகதி இலங்கை வரலாறு கண்டது. அதன் விளைவினால் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம் சமூகமும் இவ்வாறான இனவாதத் திட்டமுள்ள அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அதேவேளை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் நவீன உலகில் இடம்பெற்ற இந்த அருவெறுக்கத்தக்க செயல் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவும் எழுச்சியும் மைத்ரிபால சிறிசேன எதிர்க்கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுத்திருந்தது. இந்த ஆட்சி மாற்றம் பெரும்பான்மை முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும், சிங்கள மக்களும் விரும்பிப் பெற்றுக்கொண்டதாகும். அதனை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுக்கும் முழு உரிமை அப்துல் சத்தார் உட்பட நேற்றைய தினம் கலந்து கொண்ட அனைவருக்கம் இருக்கிறது, அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், அந்த சந்திப்பில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் வைத்து வியாபாரம் செய்யும் உரிமைஅவருக்கு இருக்கவில்லை எனும் ஜனநாயகத்தை அறியாத ஒருவராக அவர் பேசிய பேச்சுக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அத்தோடு நிறுத்திக்கொள்ளாத அப்துல் சத்தார் இன்றைய தினம் குருநாகலில் இடம்பெற்ற கூட்டத்தில் சிங்களவருக்கான ஒரே நாடு இலங்கை எனவும் இங்கு வாழும் முஸ்லிம்கள் அடங்கி வாழப் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் கைதட்டலுக்காக மீண்டும் அரங்கேற்றிய சில்லறை வியாபாரம் ஏற்கனவே தேய்ந்து போன அவரது அரசியலை முழுமையான வங்குரோத்து நிலைக்குத் தெளிவாகத் தள்ளியிருக்கிறது. அரசர்களைக் குஷிப்படுத்த புகழ் பாடிய காலங்கள் கடந்து பல நூற்றாண்டுகள் கழிந்துள்ள போதும் அடிமைத்தனம் ஒன்றே வாழ்வின் வழி என போதிக்க விளையும் ஒரு அரசியல் வாதிக்கு ஜனநாயக நாட்டில் அரசியல் செய்யும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை வாக்காளர்கள் அறிந்து செயற்பட வேண்டும்.
சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளராக இருந்தும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது நகர சபையில் முடங்கிக் கிடக்க விளைந்திருக்கும் அப்துல் சத்தார் தனது அரசியல் எதிர் காலத்தை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வழி எதுவென்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கிருக்கின்ற போதிலும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தை வைத்து சில்லறை வியாபாரம் செய்யும் உரிமை அவருக்கு இல்லை. இதன் மூலம் அவர் சாதித்துக் கொண்டது அல்லது எதிர்பார்ப்பது பெரும்பான்மை மக்களின் ஆதரவும் வாக்குகளும் என்றாலும் கூட அதற்காக தான் சார்ந்த சமூகத்தை இழிவுபடுத்தித்தான் அதை சாதிக்க வேண்டும் என அவர் எடுத்த முடிவு வக்கிரத்தன்மையும் வங்குரோத்துத் தன்மையும் நிறைந்தது என்பது இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் தேர்தலில் நிரூபிக்கப்படும்.
மஹிந்த ராஜபக்சவுக்கு நியமனத்தை வழங்கி அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் காலடியில் கிடந்து கெஞ்சிய சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியால் கூட மஹிந்த கை விடப்பட்ட நிலையில் மாநகர சபை எல்லையைத் தாண்ட முடியாத வங்குரோத்து அரசியல் நடாத்தும் அப்துல் சத்தார் சமூகத்தைத் தன் அரசியல் ஆயுதமாகப் பாவிக்க விளைந்தது தவறான விடயம் மாத்திரமன்றி எதிர்வரும் தேர்தலில், கடந்த தேர்தலில் போன்றே மஹிந்த எதிர்ப்புக்கு வலுச்சேர்க்கும் காரணியாகவும் இருக்கும் என்பது உறுதியானது.
இது போன்ற அரசியல் வியாபாரிகள் தன் வட்டத்தை மீற மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் மஹிந்த முஸ்லிம் சமூகத்தைச் சீண்டிப் பார்த்தார் என்பதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்படுகின்றது.
– சோனகர் வலைத்தளம்
Post a Comment