
பெண்ணே என்னை
மன்னித்துவிடு
வெட்கம் கெட்டவன் நான்
என்னால் கஷ்டப்பட்டவள் நீ
உன்னை வாழ்த்தும் தகுதி
எனக்கில்லை....
அதனால்
பெண்ணே என்னை
மன்னித்துவிடு....
ஓடும் பஸ்ஸில்
உன்னைக் கதறக் கதற கற்பழித்தவன் நான்.
உன்னை காதலித்து
கைப்பிடிப்பதாய் நடித்து
காரியம் முடிந்த பின்
காணாமல் போனவன் நான்.
நீ என்னை காதலிக்கவில்லை என்ற
காரணத்திற்காக
உனக்கு ஆசிட் அடித்து
உன்னை
அலங்கோலம் செய்தவன் நான்.
கல்விக்கற்க வந்த உன்னிடம்
காமத்தை கற்பித்து
குரு என்ற வார்த்தையை
குப்பையில் போட்டவன் நான்.
என்னை
பத்து மாதம் சுமந்து
வலி பொறுத்து
பெற்றெடுத்து
உன் உதிரத்தை
உணவாய் தந்தற்காக
உன்னை அனாதை
இல்லத்தில் சேர்த்து
அழகு பார்த்தவன் நான்.
அப்பா என்று நீ என்னை நெருங்க
நான் மகளென்றும் பாராமல்
உன்னை தாயாக்கி
மிருகங்களையும்
மிஞ்சியவன் நான்
என்னை சுமந்து
என் குழந்தைகளை சுமந்து
என் சுமைகளையெல்லாம்
சுமந்த உன்னை
குடும்பத்தை சுமப்பதற்காக
வெளிநாடு அனுப்பிவைத்து
நீ அனுப்பும் பணத்தில்
நிம்மதியாய் வாழ்பவன் நான்.
நான் செய்த தவறுகளுக்காக
உன்னை மன்னித்தவன் நான்
ஆதலால் பெண்ணே என்னை
மன்னித்துவிடு
உன்னை வாழ்த்தும் தகுதி
எனக்கில்லை....
-கவிஞர் அஸ்மின் -
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment