மாசடைந்த வாயுக்கள் காரணமாக சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வரும் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாகும். இதனால் அந்நாட்டில் காற்றில் கலக்கும் மாசுக்களின் அளவை குறைப்பதற்கான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அணுசக்தி பயன்பாட்டுக்கான கதவு திறக்கப்படுவதாக பிரதமர் டோனி அப்பாட் சிட்னியில் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்றத்திற்கான இலக்கை அடுத்த வருடம் பிரான்ஸில் நடக்கும் சர்வதேச அரங்கில் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தான் இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் அப்பாட் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் யுரேனியம் உற்பத்தியில் கஸகஸ்தான், கனடா போன்ற நாடுகளுக்கு அடுத்த படியாக மூன்றாம் இடத்தில் இருந்தாலும், இதுவரை அவுஸ்திரேலியா மின்சாரம் தயாரிக்க அணுசக்தியைப் பயன்படுத்தாதற்கு காரணம் சமூக உணர்வும், குறைந்த விலையில் இயற்கையாகக் கிடைக்கும் நிலக்கரி மற்றும் வாயு வளங்களுமேயாகும்.
இந்நிலையில் தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க அந்நாடு முடிவு செய்துள்ளது. உலக அரசியலின் மையமாக, 'உலக வெப்பமயமாதல்' இன்று இருக்கும் சூழலில் நிலக்கரி மின்சார சக்தியும், சுரங்க ஏற்றுமதியும் அவுஸ்திரேலியாவை உலகின் மோசமான சுற்றுச்சூழல் கொண்ட நகரமாக ஆக்கியிருக்கிறது.
"என்னிடம் அணுசக்திக்கு எதிரான நிலைப்பாடு ஏதுமில்லை, இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் தெரிவித்திருக்கிறேன்” என்று அணுசக்தியை ஆதரித்துப் பேசிய அப்பாட் தான் சமீபத்தில் நிலக்கரி மனிதகுலத்திற்கு நல்லது என்றும், கால நிலை மாற்ற அறிவியலை சுத்த பைத்தியக்காரத்தனம் என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment