smile picker smile picker Author
Title: 'மாணவர்களுக்கு மனநலம் முக்கியம்'
Author: smile picker
Rating 5 of 5 Des:
உடல் மன ஆன்மீக ரீதியான ஒட்டு மொத்த வளர்ச்சியையும் தெரிந்து கொள்வதையும் உள்ளடக்கியதே உண்மையான கல்வி. இன்று கல்வி என்பதன் வரையறை மாறி வெறும்...
உடல் மன ஆன்மீக ரீதியான ஒட்டு மொத்த வளர்ச்சியையும் தெரிந்து கொள்வதையும் உள்ளடக்கியதே உண்மையான கல்வி. இன்று கல்வி என்பதன் வரையறை மாறி வெறும் புத்தக அளவிலே இருக்கிறது. உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை இன்றைய கல்வி கற்றுக் கொடுப்பது கிடையாது. இது சின்ன வயதிலிருந்தே மாணவர்களுக்குப் பெரிய குறையாக அவர்களுடன் இணைந்தே வளர்ந்து வருகிறது. குழந்தைக்காகப் பணம் ஒதுக்க முடிந்த பெற்றோர்களால் அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. அயராமல் உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள். யாருக்காக உழைக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்காகக் கட்டாயம் நேரம் ஒதுக்கி, அவர்களின் மீது கவனம் கொள்ள வேண்டும் என்று எங்களிடம் வரும் ஒவ்வொரு பெற்றோர்களிடமும், இந்த ஆலோசனையைக் கூறுகின்றோம்.
ஒருவரோடு ஒருவர் போட்டி போடும் போட்டிக் கல்வியாக மட்டும் இன்றைய கல்வி இருப்பது மாற வேண்டும். முன்பு போலக் கூட்டுக் குடும்பமாக வாழாததால் பெரியோர்களிடமிருந்து போதிய அறிவுரைகள் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
குழந்தைகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்றால் பெற்றோரோ, ஆசிரியர்களோ, குடும்பத்தினரோ கட்டாயமாகத் தங்கள் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எங்கள் டாப்கிட்ஸ் நிறுவனம் மூலம் தற்போது நடத்தி வருகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளிடம் இருந்து அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது. பள்ளிகள் தரும் அளவுக்கு அதிகமான வேலையால் மாணவர்கள் அடையும் மன அழுத்தத்திற்கு அளவே இல்லை. இந்த மன அழுத்தத்தை போக்க பள்ளிகள், கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் மனநலவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களிடம் குழந்தைகள் எல்லாப் பிரச்சனைகளையும் வெளிப்படையாகப் பேச முடியாது. குழந்தைகளுக்கென்று தனியாக ஆலோசகரை அமர்த்த ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் முன் வர வேண்டும். மாணவர்கள் மனப்பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க இது ஒன்றே வழி.
மனநலத்துறை என்றாலே ஷாக் வைத்து சிகிச்சை செய்வார்கள் என்ற பயம் நிலவுகிறது. இந்த கண்டோட்டம் உண்மைக்குப் புறம்பான ஒன்றாகும். தற்போது ஏதேனும் ஒருவகையில் மனதளவில் பாதிப்புக்கு உள்ளானவர்களே பெரும்பாலும் வருகிறார்கள். அவர்களிடம் பேசிப் பிரச்சனையைப் புரிய வைத்தாலே போதும். அவர்கள் குணமாவது உறுதி. வேறு விதமான அழுத்தம் முதலான பல்வேறு பிரச்சனைகளுக்கு, மாத்திரைகளும் பல வகைகளில் வெளியாகி இருக்கின்றன. ஊசி மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஷாக் வைத்து அளிக்கப்படும் சிகிச்சையும், மிகக் குறைந்த அளவில் மயக்க மருந்து கொடுத்தே செய்யப்படுகிறது.
விடலைப் பருவம் என்னும் (10-22 வயது வரை) பருவத்தினர்களுக்குத் தக்க வழிகாட்டல் இல்லையென்றால், அவர்களின் எல்லையற்ற ஆற்றல்களெல்லாம் தவறான வழிகளில் வீணாகும் வாய்ப்பு உண்டு. தொலைக்காட்சி தொடர்புகளில் வரும் பண்பாட்டுப் பிறழ்வுகளைப் பார்த்து எப்படியும் வாழலாம் போல என்ற எண்ணம் உருப்பெற்று விடுகிறது. குழந்தைகள் நல்லவர்களாக வளர விரும்புவர்கள் அதனால் அவர்களின் முன்னால் இத்தகைய தொடர்களைப் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
இன்றைய சினிமாக்களில் எதிர்மறையான கதாநாயகர்களைப்பார்த்து அவர்களைப் போலச் சீரழிந்தும் போகிறார்கள். இந்த வயதினருக்காக விடலைப் பருவத்தோருக்கான வழிகாட்டல் என்ற அமைப்பை நடத்துகிறோம். அதில் பாலியல் தொடர்பான கல்வி முதல் சமுதாயத்தில் அவர்களுடைய பங்கு, குடும்பத்தில் அவர்களுடைய பங்கு இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம். எட்டு வயதில் புகைப்பிடிக்கிறான் என்று புகார் கூறுபவர்கள் குழந்தைகளின் முன்னால் நல்ல ஒழுங்குகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அப்பா செய்யும் போது ஏன் நான் செய்யக்கூடாதா? என்று கேட்க வைக்காமல் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது.
மரபு ரீதியாக மனநலவியல் பிரச்சனைகள், அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்தாலும் அந்தக் குணங்கள் வெளிப்படுவதும் வெளிப்படாமல் போவதும் பெற்றோர்களில் வளர்ப்பு முறையில்தான் இருக்கிறது.
- டொக்டர் தீப்
மனநல சிகிச்சை நிபுணர் (தமிழ் நாடு)

Advertisement

Post a Comment

 
Top