(Metro News)
சிலாபம் திண்ணனூரான்
அவ்வேதனையையும் சோதனையையும் முறியடித்து வாழ்பவர்களையே சமுதாயம் புதுமை பெண் என்கின்றது. அவ்வாறான ஒரு புதுமைப் பெண்ணே கொழும்பு மட்டக்குளியில் வசிக்கும் டி. பரீதா.
நான்கு பெண் பிள்ளைகளினதும் ஒரு ஆண் பிள்ளையினதும் தாயான பரீதா, கொழும்பின் வடபகுதியில் பல பிரதேசங்களில் சைக்கிளில் அலைந்து மீன் வியாபாரம் செய்கிறார்.
44 வயதான பரீதா, கடந்த ஆறு வருடங்களாக துணிவுடன் மீன் வர்த்தகம் செய்து வருகிறார். தனது இந்த உழைப்பின் மூலமாகவே தனது ஐந்து குழந்தைகளையும் அவர் கல்வி கற்க வைக்கின்றார். 'எனது பிள்ளைகள் வருங்காலத்தில் கல்வி கற்று பெரும் உத்தியோகங்களை பெற்று வளமாக வாழவேண்டும். என்னைப் போன்று வெயிலிலும் மழையிலும் திரிந்து கஷ்டப்படக் கூடாது என்கிறார் பரீதா.
அவரின் தமிழ் பேச்சு நடை கேட்க இனிமையாக இருக்கும். கணீரென்ற குரலில் இலக்கிய நயத்துடன் மிகத் தெளிவாக சொற்களை தொகுத்து அழகாக தமிழில் உரையாடுகின்றார். இவர் கல்வி கற்றது மோதரவிலுள்ள ஒரு பாடசாலையில். க.பொ.தராதரம் சாதாரணம் வரையே கல்வி கற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
'பலரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மீன் வியாபாரத்தில் இறங்கினேன். இதற்கு முன்னர் எவ்வித வியாபாரமும் செய்து எனக்குப் பழக்கமிருக்கவில்லை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல பணம் தேவை. திடீரென தோன்றிய எண்ணத்தின் படி மீன் வியாபாரத்தில் இறங்கினேன்.
முன்னர் புறக்கோட்டைக்குச் சென்று, மீன் சந்தையில் மீன்களை வாங்கி, செய்து சைக்கிளில் கொண்டு சென்றேன். அவற்றை பல வீதிகளில் வீடு வீடாக சென்று மீன் விற்க ஆரம்பித்தேன். சிறிது காலத்தில் எனக்கென வாடிக்கையாளர்களை தேடிக் கொண்டேன்.
எனது வாழ்க்கையாளர்களின் மனம் அறிந்து, அவர்களின் தேவையை உணர்ந்து மீன் விற்பனையை தொடர்ந்தேன். அதில் வெற்றியும் கண்டேன். எந்தவொரு வர்த்தகமும் தலை நிமிர நாம் எமது வாடிக்கையாளர்களை பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளரின் மனம் நோகும்படி வார்த்தைகளை வெளியிட்டுவிட்டால், மீண்டும் அவர் என்னிடம் மீன் வாங்க வரமாட்டார். எனது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கான தரமான மீன்களையே நான் வாங்கி விற்பேன். இந்த ஆறு வருடங்களும் எனது குடும்பத்தையும் இத்தொழிலே வாழவைக்கிறது' என்கிறார் பரீதா.
தொடர்ந்து எமக்கு அவர் தனது வியாபாரம் பற்றி விளக்குகையில், எனக்கான வாடிக்கையாளர்களாக நான் சேமித்து வைத்திருப்பது குடும்பத் தலைவிகளேயாவர். இக்குடும்பத் தலைவிகளுக்கு ஒரு குடும்ப பெண்ணின் கஷ்ட நஷ்டங்கள் நன்கு தெரியும். ஒவ்வொரு குடும்பப் பெண்களும் நல்ல அனுபவசாலிகள் இவர்கள் எனக்கு உதவும் வகையிலேயே மீன்களை என்னிடமிருந்து வாங்குகின்றனர். இதனால் நானும் மீன்களை அதிகளவில் இலாபம் வைத்து விற்பதில்லை.
தினமும் காலை 4 மணிக்கு நித்திரை விட்டெழும்பி எமது பிள்ளைகளுக்கு காலை உணவையும் பகல் உணவையும் தயாரித்து வைத்ததன் பின்னர் பேலியாகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்முதல் செய்வதற்காக பயணமாவேன்.
இச்சந்தையின் மொத்த வியாபாரிகளிடம் தினமும் எட்டு கிலோ முதல் பத்து கிலோ வரையில் கொள்முதல் செய்வேன். சில விசேட வைபவங்களையொட்டிய தினத்தில் மீன் கொள்முதல் எடை அதிகரிக்கவும் செய்யும். காலை 9 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை மீன் விற்பனையில் ஈடுபடுவேன். மட்டக்குளி, மோதர, சமிட்புர, கிம்புலா என பிரதேங்களிலேயே நான் மீன் விற்பனையை ஆறு வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றேன். இப்பகுதிகளிலேயே எனக்கான வாடிக்கையாளர்கள் வசிக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை மற்றும் நோன்பு காலத்தில் நான் மீன் வியாபாரத்தை மேற்கொள்வதில்லை.
நான் நான்கு தடவைகள் சவூதி, ஜோர்தான், குவைத் நாடுகளுக்கு பணிப் பெண்ணாக தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தேன். இம்மூன்று நாடுகளிலும் முறையாக சம்பளம் வழங்காமையினால் ஒரே மாதத்தில் மீண்டும் நாடு திரும்பிவிட்டேன்' என்கிறார் பரீதா.
இத்தொழிலின் பிரச்சினை இல்லையா எனக்கேட்டோம். "எவ்வித பிரச்சினையும் இல்லை. எமது வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் மாலை இரண்டு மணியுடன் முடிவடைந்துவிடும். அதன் பின்னர் நானும் ஏனைய பெண்களைப் போன்று குடும்பப் பெண்ணாக முற்றிலும் மாறிவிடுவேன்.
ஆண்கள் தான் அனைத்து தொழில்களையும் புரிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இன்று உடைக்கப்பட்டுவிட்டது. பெண்களுக்கு எவ்வளவோ சுயதொழில்கள் உள்ளன. முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்" என்றார் பரீதா, நம்பிக்கையுடன்.
.
Post a Comment