smile picker smile picker Author
Title: களிகம்பு அகமதுலெவ்வை சாந்தி முஹியித்தீன்
Author: smile picker
Rating 5 of 5 Des:
அகமதுலெவ்வை (சாந்தி முஹியித்தீன்)  (பிறப்பு: அக்டோபர் 9, 1942) ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார். இவரின் புனைப்பெயர்கள் - ‘பாவலர்’, ‘காத்தா...
அகமதுலெவ்வை (சாந்தி முஹியித்தீன்) (பிறப்பு: அக்டோபர் 9, 1942) ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார். இவரின் புனைப்பெயர்கள் - ‘பாவலர்’, ‘காத்தான்குடிக் கவிராயர்’, ‘சாஅதி’.



மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கிராம சேவகர் பிரிவில் முகம்மது மீராசாகிபு, கதீஜா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த இவரின் இயற்பெயர் அகமது லெவ்வை. ஆனாலும் சாந்தி முஹியித்தீன் என்ற பெயராலே அறியப்படுகின்றவர். இவர் தமது ஆரம்பக் கல்வியை மட் /காத்தான்குடி மெத்தைப் பள்ளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்திலும் பெற்றார். இவரின் மனைவி செயினப். பிள்ளைகள் - சமீம், சாதாத், சாதிக், சாபித், சாபிர்.

சாந்தி முஹியித்தீனுடைய முதலாவது கவிதை 14-09.1963 இல் வீரகேசரி ‘இஸ்லாமிய உலக மலரி’ல் “வெண்ணிலாவே” என்ற தலைப்பில் வெளிவந்தது. அன்று முதல் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, தினக்குரல், சுடரொளி, மித்திரன், நவமணி ஆகிய தேசியப் பத்திரிகைகளிலும், ஏனைய சிறு பத்திரிகைகள், சஞ்சிகை, பிரதேச கலாசார மலர்கள் போன்றவைகளிலும், சில இந்தியச் சஞ்சிகைகளிலும் கவிதை, கதை, ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 12 சிறுகதைகளையும், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

நாவலர் தாவுத் சா, சாந்தி முஹியித்தீன் ஆகிய இருவரும் இணைந்து காத்தான்குடியில் ‘நவ இலக்கிய மன்றத்தை’ 1959ஆம் ஆண்டு (07.09.1959) ஸ்தாபித்து இலக்கியப்பணி புரியத் தொடங்கினர். இப்பணியை ஐந்து தசாப்த்தங்களாக இவர் செய்து வருகின்றார். நவ இலக்கிய மன்றம் 12க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டும், 20க்கு மேற்பட்ட கலை இலக்கிய கர்த்தாக்களைக் கௌரவித்தும், 40க்கு மேற்பட்ட கவியரங்கு, பட்டிமன்றம் போன்ற இலக்கிய அரங்குகளை நடத்தியும் உள்ளது. இம்மன்றத்தின் தலைவர் இவரே. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் செயலாளராகவும், ‘பாவலர் பண்ணை’யின் காவலராகவும் செயற்பட்டுவரும் சாந்தி முஹியித்தீன் பரவலாக 50க்கு மேற்பட்ட கவியரங்குகளுக்குத் தலைமைத் தாங்கியுள்ளார்.

காத்தான்குடி நவ இலக்கியமன்றம் 1962களில் வெளியிட்ட “இலக்கிய இதழ்” கையெழுத்துப் பத்திரிகை முதல் பாவலர் பண்ணை வெளியிட்ட ‘பா’ என்னும் கவிதைப் பத்திரிகை வரை பல பத்திரிகைகளின் ஆசிரியராக, ஆலோசகராக செயற்பட்;டுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களின் கலாசார கலை பாரம்பரிய வடிவங்களில் ஒன்றான கோலாட்டக் கலையிலும் இவருக்கு ஈடுபாடுண்டு.. இக்கலை நெடுங்காலமாக முஸ்லிம்களால் பாதுகாத்து வருகின்ற ஓர் கிராமியக் கலையாகும். தற்பொழுது இக்கலை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளான மன்னார், மட்டக்களப்பு, புத்தளம், கற்பிட்டி, குருணாகல், பேருவலை போன்ற இடங்களில் ஆங்காங்கே வழக்கத்தில் உள்ளது. முஸ்லிம்கள் கோலாட்டத்தை கம்படி, பொல்லடி, களிகம்பு, களிக்கம்படி என்று பலவாறாக அழைத்தாலும் “களிகம்பு” என்றே அதிகமாகப் பேசப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் களிகம்புக் கலை இந்தியாவிலுள்ள களியல் ஆட்டத்தையும், மலையாளத்திலுள்ள 'கோல்களி' ஆட்டத்தையும் உள்ளடக்கியதாகும். இக்கலையை இவர் முறையாகப் பயின்றுள்ளதுடன், அதனைக் கற்றுக் கொடுக்கும் வாத்தியாராகவும் திகழ்கின்றார். களிகம்பு ஆட்டக்கலையை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியும், விரிவுரை வகுப்புக்கள் நடாத்தியும் அதன் சிறப்பை எடுத்துப் பேசிவரும் இவர் இத்துறை சார்ந்த ஆய்வாளர்களுள் முக்கியமானவர்.

சாந்திமுஹியித்தீனின் மேற்குறித்த சேவைகளைக் கருத்திற்கொண்டு பல்வேறு இலக்கிய அமைப்புகள் இவருக்கு ‘பாவலர்’, “இலக்கியச்சுடர்”, “இலக்கிய வித்தகர்”, “கலாஜோதி”, ‘இலக்கியக் காவலர்’ ஆகிய பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளன. 01.10.2001ல் வடகிழக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சினால் 'ஆளுநர் விருதும்' 2002ம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலாபூசணம்' விருதும் வழங்கப்பட்டது.

Advertisement

Post a Comment

 
Top