smile picker smile picker Author
Title: 24 குளு குளு அறைகள், நீச்சல் குளம் கொண்ட ஆடம்பர சாமியார் ராம்பால் ஆசிரமம்
Author: smile picker
Rating 5 of 5 Des:
அரியானா மாநில சாமியார் ராம்பால், கடந்த புதன்கிழமை, கொலை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்...
அரியானா மாநில சாமியார் ராம்பால், கடந்த புதன்கிழமை, கொலை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, சாமியாரை கைது செய்ய சென்ற போலீசார், ஆசிரமத்தின் ஆடம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சண்டிகார்-சார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 12 ஏக்கர் பரப்பளவில் அவரது ‘சத்லோக்’ ஆசிரமம் அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலில் பக்தர்களை பரிசோதிக்க ‘மெட்டல் டிடெக்டர்’ வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரமம், கோட்டை போன்று கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள் உள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாமியாருக்கு தனியார் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரமத்தின் மையப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்ட பிரார்த்தனை அரங்கம் கட்டப்பட்டது. அது, 50 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது. அரங்கத்தின் நடுவில், உயரமான மேடை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு குண்டு துளைக்காத கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்துதான் சாமியார் ஆன்மிக போதனைகளை நிகழ்த்துவார்.

பிரார்த்தனை அரங்கத்தை சுற்றிலும் உறுதியான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு புறம் ஆண்களுக்கும், மறுபுறம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சாமியாரின் போதனைகளை திரையில் காண்பிக்க 3டி புரொஜக்டர் வசதியும் உள்ளது.

ஆசிரமத்தில், 24 குளு குளு அறைகள் உள்ளன. அவை நட்சத்திர ஓட்டல் அறைகளைப் போன்று உள்ளன. அனைத்திலும் குளியலறை இணைப்பு உள்ளது. ஓர் அறையில் ‘மசாஜ்’ படுக்கை உள்ளது. மற்றொரு அறையில் ‘ட்ரெட்மில்’ வசதி உள்ளது. 4 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில், குளு குளு வசதியுடன் கூடிய ஒரு பிரமாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதைவிட போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்த விஷயம் என்னவென்றால், ஆசிரமத்தில் ஏராளமான துப்பாக்கிகள் இருந்தன. ஒரு ரகசிய அறையில் இருந்த இரண்டு பீரோக்களில் கைத்துப்பாக்கி, குழல் துப்பாக்கி, எஸ்.எல்.ஆர்.ரக துப்பாக்கி என விதவிதமான துப்பாக்கி கள் இருந்தன. துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.

இந்த அறை, சாமியார் ராம்பால் அமர்ந்து போதனை செய்யும் உயர்ந்த மாடத்துக்கு கீழே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் எழாத வகையில் உள்ளது.

ஆசிரமத்தில் பிரமாண்ட சமையல் அறை உள்ளது. அதில், ஒரு லட்சம் பேருக்கு ஒரு மாதத்துக்கு சமைத்துப்போட தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கு ரொட்டி சுடும் எலெக்ட்ரானிக் எந்திரம் உள்ளது. அதில், ஒரே நேரத்தில் ஆயிரம் ரொட்டிகள் தயார் செய்யலாம். இதுதவிர, நவீன மருத்துவமனையும் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட பஸ் மற்றும் வாகனங்களும் உள்ளன. 

Advertisement

Post a Comment

 
Top